Tuesday, February 21, 2012

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இனி போட்டித் தேர்வு - அரசாணை வெளியீடு-24-11-2011

5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.
இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை
* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.
* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.
* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.
* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.
* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
இதன்படி, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், குறைந்தபட்சம் டி.டி.இ.டி., (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) பெற்றிருக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பி.எட்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

No comments: