Tuesday, June 26, 2012

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது


சேலம் : ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கே பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற தகவல் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் சக்தி சேலத்தில் தெரிவித்ததாவது:

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தான் பணி நியமனம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவுப்படி, 23.8.2010க்கு முன்பு, ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியான அறிவிப்புகளுக்கு இந்த தகுதி தேர்வு பொருந்தாது. கடந்த திமுக ஆட்சியின்போது 2006,07ல் 7,979 பட்டதாரி ஆசிரியர்கள் சீனியாரிட்டிபடி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, 7,268 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 711 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இவ்வாறு, 2006 முதல் 2010ம் ஆண்டு வரை கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் மொத்தம் 15,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

என்சிடிஇ உத்தரவுப்படி, இந்த காலியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும். தகுதித்தேர்வு நடத்தக் கூடாது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு தான் முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே அவர் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதியானவர் தான். அதனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். அதற்கு, தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட்டு, மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் சக்தி கூறினார்.

நியமனம் செய்வது எப்படி?

 தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற வேண்டும் என்றால் டி.டி.எட், பி.எட் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.
 இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
மார்ச் 22ம் தேதி முதல் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. டி.டி.எட் (இடைநிலை) படித்தவர்களுக்கு தாள்,1 , பி.எட் (பட்டதாரிகள்) படித்தவர்களுக்கு தாள்,2
தேர்வில் இடம்பெறும் கேள்வித்தாளில் 150
கேள்விகள் இடம் பெறும். ஒன்றரை மணி
நேரத்தில் விடைகளை ஓஎம்ஆர் ஷீட்டில் பதிவு செய்ய
வேண்டும்.
இந்த தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுப்பவர்களே தேர்ச்சி பெற்றவர்கள்.
 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.
அதிக மதிப்பெண் பெறும் 18,000 பேருக்கு 5 பாடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது.
 ஆண்டுதோறும் இந்த தகுதித் தேர்வு நடக்கும்.