Wednesday, July 4, 2012

ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இதற்காக ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,451 இடைநிலை ஆசிரியர்கள், 18,345 பட்டதாரி ஆசிரியர்கள், 634 வட்டார வள மைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் தாள் 1-ல் 60 ஆயிரம் ஆண்கள், 1,86,913 பெண்கள் எழுதுகின்றனர். தாள் 2-ல் (பட்டதாரிகளுக்கானது) 1 லட்சத்து 6 ஆயிரத்து 908 ஆண்கள், 2,43,774 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர். இரண்டு தேர்வையும் சேர்த்து 14, 137 ஆண்கள், 44,305 பெண்கள் எழுதுகின்றனர். 

பார்வை குறைபாடு, ஊனமுற்றவர்கள் 3,556 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 1027 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் ஓஎம்ஆர் விடைத்தாள் அச்சிடப்பட்டுள்ளது. 55,339 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வு எழுத விண்ணப்பித்த பல பேர் தவறான விவரம் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலம், தமிழ் என எந்த மொழியில் எழுதுகிறோம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். அதுபோல், பெயர், பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு இருந்தால் தேர்வு மையத்துக்கு வரும்போது உண்மை நகல்களை காண்பித்து சரிப்படுத்திக்கொண்டு தேர்வு எழுத வேண்டும்.

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இன்டர்நெட்டில் பார்த்து தேர்வு எழுத பெயர் உள்ளதா என சரிப்பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் தவறு, ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு நாளை முதல் ஒவ்வொரு மாவட்டமாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள். பிரச்னை உள்ளவர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து தவறுகளை சரி செய்துகொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து இருந்தால் அதற்கான நகல், பணம் கட்டிய ரசீது, ஒப்புகை சீட்டை அதிகாரிகளிடம் காண்பித்து சரிபார்த்து கொள்ளலாம். 

குறிப்பிட்ட தேர்வு மையத்துக்குத்தான் ஹால் டிக்கெட் வரும். ஒவ்வொரு தேர்வு அறையில் 20 பேர் உட்கார வைக்கப்படுவார்கள். ஹால் டிக்கெட் அனுப்பிய விவரம், பெயர் பட்டியல் போட்டோ இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒஎம்ஆர் சீட்டில் நீல, கருப்பு பேனாவால் எழுதவேண்டும். பென்சில் பயன்படுத்தக்கூடாது. கால்குலேட்டர், லாக் டேபிள், செல்போன் கொண்டு செல்லக்கூடாது. கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கும். மொழி பாடம் மட்டும் அவரவர் தாய்மொழியில் இருக்கும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.