Tuesday, July 10, 2012

TNPSC குருப் - II தேர்வில் வெற்றி பெற


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC - Tamilnadu Public Service Commission) ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு -1 (Combined Subordinate Services Examination-1, CSSE-1) அறிவிப்பினை வெளி யிட்டுள்ளதை அறிவீர்கள். இது வேலை வாய்ப்பை நோக்கி காத்திருக்கும் பட்ட தாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இவ்வறிவிப் பின் மூலம் அரசு ஊழியர் பதவிக்கு தகுதி யுடையவர்களை தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. அத்தேர்வானது பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்வி களும் பொதுதமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் உள்ளடங்கிய 300 மதிப்பெண் களுக்கான தேர்வாக நடத்தப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக்கிறார்களோ, அவர்களே வெற்றிப் பெற முடியும்.


சரி.வெற்றி பெறுமளவுக்கு மதிப்பெண் களை பெறுவது எப்படி? முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.


பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.


இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.


இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.


இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,


பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,


எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.


அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள். 

Wednesday, July 4, 2012

ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இதற்காக ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,451 இடைநிலை ஆசிரியர்கள், 18,345 பட்டதாரி ஆசிரியர்கள், 634 வட்டார வள மைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் தாள் 1-ல் 60 ஆயிரம் ஆண்கள், 1,86,913 பெண்கள் எழுதுகின்றனர். தாள் 2-ல் (பட்டதாரிகளுக்கானது) 1 லட்சத்து 6 ஆயிரத்து 908 ஆண்கள், 2,43,774 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர். இரண்டு தேர்வையும் சேர்த்து 14, 137 ஆண்கள், 44,305 பெண்கள் எழுதுகின்றனர். 

பார்வை குறைபாடு, ஊனமுற்றவர்கள் 3,556 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 1027 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் ஓஎம்ஆர் விடைத்தாள் அச்சிடப்பட்டுள்ளது. 55,339 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வு எழுத விண்ணப்பித்த பல பேர் தவறான விவரம் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலம், தமிழ் என எந்த மொழியில் எழுதுகிறோம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். அதுபோல், பெயர், பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு இருந்தால் தேர்வு மையத்துக்கு வரும்போது உண்மை நகல்களை காண்பித்து சரிப்படுத்திக்கொண்டு தேர்வு எழுத வேண்டும்.

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இன்டர்நெட்டில் பார்த்து தேர்வு எழுத பெயர் உள்ளதா என சரிப்பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் தவறு, ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு நாளை முதல் ஒவ்வொரு மாவட்டமாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள். பிரச்னை உள்ளவர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து தவறுகளை சரி செய்துகொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து இருந்தால் அதற்கான நகல், பணம் கட்டிய ரசீது, ஒப்புகை சீட்டை அதிகாரிகளிடம் காண்பித்து சரிபார்த்து கொள்ளலாம். 

குறிப்பிட்ட தேர்வு மையத்துக்குத்தான் ஹால் டிக்கெட் வரும். ஒவ்வொரு தேர்வு அறையில் 20 பேர் உட்கார வைக்கப்படுவார்கள். ஹால் டிக்கெட் அனுப்பிய விவரம், பெயர் பட்டியல் போட்டோ இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒஎம்ஆர் சீட்டில் நீல, கருப்பு பேனாவால் எழுதவேண்டும். பென்சில் பயன்படுத்தக்கூடாது. கால்குலேட்டர், லாக் டேபிள், செல்போன் கொண்டு செல்லக்கூடாது. கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கும். மொழி பாடம் மட்டும் அவரவர் தாய்மொழியில் இருக்கும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.

Tuesday, June 26, 2012

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது


சேலம் : ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கே பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற தகவல் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் சக்தி சேலத்தில் தெரிவித்ததாவது:

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தான் பணி நியமனம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவுப்படி, 23.8.2010க்கு முன்பு, ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியான அறிவிப்புகளுக்கு இந்த தகுதி தேர்வு பொருந்தாது. கடந்த திமுக ஆட்சியின்போது 2006,07ல் 7,979 பட்டதாரி ஆசிரியர்கள் சீனியாரிட்டிபடி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, 7,268 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 711 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இவ்வாறு, 2006 முதல் 2010ம் ஆண்டு வரை கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் மொத்தம் 15,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

என்சிடிஇ உத்தரவுப்படி, இந்த காலியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும். தகுதித்தேர்வு நடத்தக் கூடாது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு தான் முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே அவர் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதியானவர் தான். அதனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். அதற்கு, தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட்டு, மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் சக்தி கூறினார்.

நியமனம் செய்வது எப்படி?

 தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற வேண்டும் என்றால் டி.டி.எட், பி.எட் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.
 இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
மார்ச் 22ம் தேதி முதல் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. டி.டி.எட் (இடைநிலை) படித்தவர்களுக்கு தாள்,1 , பி.எட் (பட்டதாரிகள்) படித்தவர்களுக்கு தாள்,2
தேர்வில் இடம்பெறும் கேள்வித்தாளில் 150
கேள்விகள் இடம் பெறும். ஒன்றரை மணி
நேரத்தில் விடைகளை ஓஎம்ஆர் ஷீட்டில் பதிவு செய்ய
வேண்டும்.
இந்த தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுப்பவர்களே தேர்ச்சி பெற்றவர்கள்.
 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.
அதிக மதிப்பெண் பெறும் 18,000 பேருக்கு 5 பாடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது.
 ஆண்டுதோறும் இந்த தகுதித் தேர்வு நடக்கும்.

Thursday, June 21, 2012

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?


"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?-21-06-2012


சென்னை: பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.

பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.

* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.

* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.

* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.

* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.

இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428

உயர்கல்வித் துறை

* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.

* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.

* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318

சட்டத்துறை

* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த 3 துறைகளிலும் மொத்தமாக சேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

Wednesday, May 23, 2012

கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு!-23-05-2012

சென்னை: கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்: தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வு எழுதத் தேவையில்லை. Olay Pro-X Advanced Cleansing System, 0.68-Fluid Ounce Olay Pro-X Advanced Cleansing System, 0.68-Fluid Ounce இந்த தேதிக்குப் பின், ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, பணி நியமனம் பெற்ற ஆசிரியர், கண்டிப்பாக டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், முந்தைய ஆட்சியில் அறிவிப்பு வெளியாகி, இந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்ற அரசு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தேர்வுக் கட்டணமாக இவர்கள் செலுத்திய, 500 ரூபாய் திருப்பி தரப்படுமா என்பது தெரியவில்லை.

Monday, April 16, 2012

ஆசிரியர்கள் நியமனம் : அரசு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

நெல்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக இல்லாததால் விண்ணப்பதாரர்கள் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என சுமார் 36 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பதாக அரசு அறிவிப்புகள் வெளியாயின.

இந்நிலையில் மத்திய அரசு இயற்றிய கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் பணியில் சேர தகுதிதேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு சேர தகுதி தேர்வை அரசு அறிவித்தது. அதற்கு அனைவரும் விண்ணப்பித்தனர். ஜூன் 3ம் தேதி தமிழகத்திலுள்ள முக்கிய மையங்களில் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 150 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற முடியும்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் சட்டசபையில் கல்வித்துறை மான்யக் கோரிக்கையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறுகையில், “ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் நிர்ணயிக்கப்படும் ‘கட்-ஆப் மார்க்‘கின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்“ என அறிவித்தார். இந்த அறிவிப்பு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது தகுதித்தேர்வுக்கு தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் விண்ணப்பங்களில் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, இதில் தேர்ச்சி பெறுவதால் பணி நியமனத்துக்கான எந்தவித உரிமையையும் கோர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாக அரசு அறிவித்துள்ளது.

<ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் நிர்ணயிக்கப்படும் ‘கட்-ஆப் மார்க்‘ அடிப்படையில் என்று அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் பெற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போல் போட்டித் தேர்வு எழுத வேண்டுமா? அல்லது இடைநிலை ஆசிரியர்களை போல் தகுதிதேர்வுக்கு பின்னர் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்படுமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Friday, March 30, 2012

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு புதிதல்ல...:இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ""ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை.இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, திருச்சியில், சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, ""விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதிப்பெண்கள் தான் முக்கியம்:இந்த அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்படுவர்.பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே, அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

கால அவகாசம் நீட்டிப்பு:கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட, இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய, போதுமான கால அவகாசம் வழங்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=438242

Wednesday, March 21, 2012

Wednesday, March 7, 2012

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கேள்விகள் எப்படி இருக்கும்?

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கேள்விகள் எப்படி இருக்கும்?
                        இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
                        இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது.  தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு(சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர்.
                        தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை, உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை முன்பு இருந்து வந்ததைப் போன்று பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை  போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது.  இதற்கிடையே இந்தியாவில் இலவச கட்டாய கல்வி சட்டம் கடந்த 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்  தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.   இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முதல்கட்டமாக  பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் மட்டும் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
                     தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ.) வரையறை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டு உள்ளது.  மொழி ஆசிரியர்(தமிழ், ஆங்கிலம்), கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சமூகவியல் ஆசிரியர் என்று 3 வகையாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  தற்போது முதல்முறையாக தகுதித்தேர்வு நடத்தப்பட  உள்ளதால் அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய பாடத்திட்டம் இன்னும் ஓரிரு நாளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.  இதன்மூலம், எந்த முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், என்னென்ன பாடங்களை படிக்கவேண்டும் என்பதையும் தேர்வு எழுத காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். 
                     ஆசிரியர் தகுதிதேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.  ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்த மார்க் 150.  இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள்.  ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம்.  மதிப்பெண் தகுதியையும் கூட்டிக் கொள்ளலாம்.  தகுதித்தேர்வில் தேர்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.  அந்த சான்று 5 ஆண்டுகள் செல்லத்தக்கது.  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
                  தற்போது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்பட அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்தான் (60 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.  ஒரு வேளை இடஒதுக்கீட்டு பிரிவினரில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் தேவையான அளவு தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மட்டும் மதிப்பெண் தகுதியை சற்று குறைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

Tuesday, March 6, 2012

முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுன் 3ல் நடக்கிறது-07-03-2012

சென்னை: கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
* கடந்த 2010, ஆக., 23ம் தேதிக்குப் பின், அரசு, அரசு நிதியுதவி, தனியார் என எந்தப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவரானாலும், ஆசிரியர் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.
* ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என விரும்புபவர்களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும் இத்தேர்வை எழுத வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதல் தாள் தேர்வையும்; பட்டதாரி ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் மற்றும் இந்தப் பணிக்கு வர விரும்புபவர்கள், இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.
* இடைநிலை மற்றும் பட்டதாரி என, இரு வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பணி செய்ய விரும்புபவர்கள், இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.
* கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், Objective முறையில் இருக்கும். தலா, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற வேண்டும்.
* விண்ணப்பம் விலை, 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய். இரு தாள் தேர்வுகளை சேர்த்து எழுதவும், 500 ரூபாய் கட்டணமே போதுமானது.
* ஏப்., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி, தகுதித் தேர்வு நடைபெறும்.
* ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனினும், ஏழு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

More info: http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=13335&cat=1

Wednesday, February 22, 2012

விரைவில் அறிவிப்பு வெளியாகிறது ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அனுமதி அளித்தது தமிழக அரசு

சென்னை : பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு நடத்தும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது. 

இதுகுறித்து, சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், இந்த ஆண்டு 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப் போவதாக அறிவித்தார். 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்த தகுதித் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வை எப்படி நடத்துவது என்பதில் இதுவரை குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், இப்போது தகுதித் தேர்வு நடத்துவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு குறித்த முழு விவரம் அரசு கெசட்டில் வெளியிட உள்ளனர்.

இதன்படி தமிழ், ஆங்கிலம், சுற்றுச்சூழல், குழந்தைகள் மேம்பாடு ஆகியவை பொதுவாக வைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இடம் பெறும் கேள்விகளுக்கு எல்லோரும் விடை அளிக்கவும், பின்னர் பாடங்களுக்கு ஏற்ப தனித்தனியாக விடை அளிக்கும் வகையிலும், தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை தெரிவித்தது. ஆனால், என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு விதிகளை அடிப்படையாக கொண்டே தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

எனவே, என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு போலவே ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. ஆனால், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக கேள்விகள் அமையா மல் 3 பிரிவுகளில் பாடங் களை பிரித்து அதற்குரிய கேள்விகள் இடம் பெற உள்ளன. அதனால் வரலாறு, புவியியல் பாடங்களை படித்தவர்களும் கணக்கு, அறிவியல் பாட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பட்டதாரிகள் உஷாராக இருக்க வேண்டும்.

Tuesday, February 21, 2012

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இனி போட்டித் தேர்வு - அரசாணை வெளியீடு-24-11-2011

5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.
இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை
* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.
* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.
* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.
* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.
* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
இதன்படி, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், குறைந்தபட்சம் டி.டி.இ.டி., (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) பெற்றிருக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பி.எட்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

குழப்பத்தில் ஆசிரியர்களும், ஆசிரியர் தேர்வு வாரியமும் -01-12-2011

குழப்பத்தில் ஆசிரியர்களும், ஆசிரியர் தேர்வு வாரியமும் -01-12-2011

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை நடத்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, இந்த வகை தேர்வு தேர்ச்சியை ஒரு தகுதியாகக் கொண்டு, தேர்வு செய்ய வேண்டும்.
அதன்படி, இந்த வகை தேர்வை, தமிழக அளவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
குழப்பங்களுக்கான காரணம்* ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேர்வு முறையில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் கணக்கில் கொள்ளப்படுமா என்பது குறித்து, எதுவும் அறிவிக்கவில்லை.
* ஆசிரியர் பயிற்றுனர்கள், தொடர்ந்து போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வகை ஆசிரியர்கள், வழக்கமான போட்டித் தேர்வுடன், ஆசிரியர் தகுதித் தேர்வையும் எழுத வேண்டுமா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வை மட்டும் எழுதினால் போதுமா என்பது குறித்தும் அறிவிப்பு கிடையாது.
* ஆசிரியர் தகுதித் தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள், தகுதி பெறுகின்றனர் என்றால், காலிப் பணியிடங்களை விட அதிகமானவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தால், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்னிந்திய செயலர் அண்ணாமலை இது குறித்து கூறும்போது, "அரசாணையில், சில குழப்பங்கள் இருப்பது உண்மை தான். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது, ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள ஒரு தகுதியாக இருக்க வேண்டும் என்று தான், மத்திய அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை தேர்வு மூலமே, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை" என்றார்.
மேலும், "காலிப் பணியிடங்களை விட, அதிகமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால், அனைவரும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படுவர். பிற மாநிலங்களில் இப்படி தான் நடக்கிறது" என்றார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் கீழ், கணிதம் - அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கும், மொழித்தாள் ஒன்றில் 30 மதிப்பெண்கள், மொழித்தாள் இரண்டில், 30 மதிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் மன நலன் தொடர்பாக, 30 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகளை கேட்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், மொழிப்பாட ஆசிரியர்கள் என்று வரும்போது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்தே, 150 மதிப்பெண்களுக்கான கேள்விகளையும் கேட்க வேண்டுமா; இவர்களிடம், கணிதம் - அறிவியல் மற்றும் சமூகக் கல்வி தொடர்பான 60 மதிப்பெண்களுக்கு, எப்படி கேள்வி கேட்பது எனத் தெரியாமல், தேர்வு வாரியம் குழப்பத்தில் இருந்து வருகிறது. இந்த குழப்பங்களுக்கு விளக்கம் கேட்டு, அரசுக்கு, தேர்வு வாரியம் கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தால் தான், புதிய ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள சிக்கல்கள் தீரும்.
வட மாநிலங்களில், பட்டதாரி ஆசிரியர்களில், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் என, தனியாக கிடையாது. பிற பாடங்களின் ஆசிரியர்களே, மொழிப் பாடங்களையும் நடத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், மொழிப் பாடங்களுக்கு என, தனியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை-24-01-2012

தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படும் நிலையில் அனைத்து உயர்நிலைப் பள்ளிக்கும் பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டில் 200 நடுநிலைப் பள்ளிகளும் 2010-11ம் ஆண்டில் 344 பள்ளிகளும் 2011-12ம் ஆண்டில் 710 பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளை தவிர்த்து 4,600க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 100க்கும் குறைவாக மாணவர்கள் இருப்பின், இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்பணியிடங்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தமிழ் பாடத்தில் பி.எட்., முடித்து தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர்.
இதனால் தமிழ், அறிவியல், கணிதம் என மூன்று பாடத்தில் மட்டுமே பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவே உள்ளதால் பெரும்பாலான பள்ளிகளில் கணிதம் அல்லது அறிவியல் பட்டதாரி ஆசிரியரே ஆங்கிலம் அல்லது சமூக அறிவியல் பாடங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், சமூக அறிவியல் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாட வாரியான ஆசிரியர்கள் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர் எண்ணிக்கை, மிக குறைவாகவே உள்ளது. உரிய பாடத்தில் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படும் போது கல்வித் தரம் மேலும் மேம்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கேற்ப தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




Tuesday, February 14, 2012

உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு போட்டோ போட்டி!-14-02-2012

சென்னை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கான, 34 பணியிடத்திற்கு, 66 ஆயிரத்து 957 பேர் போட்டியிடுகின்றனர்.
தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு, வரும் 19ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அதே நாளில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் தேர்வுகள் இருப்பதால், பிப்., 26ம் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 1,548 பேரின் விண்ணப்பங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. இதற்கான காரணங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு, இணையதளம் மூலம் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள, 66 ஆயிரத்து, 957 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பாட வாரியாக, தமிழ் - 10,926; ஆங்கிலம் - 8,534; கணிதம் -15,498; இயற்பியல் - 7,250; வேதியியல் - 8,612; தாவரவியல் - 3,869; விலங்கியல் - 5,106; வரலாறு - 6,230; புவியியல் - 932 பேர், இத்தேர்வை எழுத உள்ளனர்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே, தேர்வு நடைபெறும் என்றும், இவர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 20ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பணிகள் ஜரூர்!-14-02-2012

சென்னை: மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்ணப்பத்தின் விலை 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம் 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வும், அதன் பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களுடன், 2010, ஏப்., 1ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
5 லட்சம் பேர்; ரூ.27 கோடி வருவாய்: குறைந்தது, ஐந்து லட்சம் முதல், அதிகபட்சம், ஆறு லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும், கடைசி நேரத்தில், விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்ய, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம் 500 ரூபாயாகவும் இருக்கும் என்றும், தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்தால் கூட, தேர்வு வாரியத்திற்கு, 27.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
பாடத்திட்டம்: இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும்.
தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்புதல்: பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.

Wednesday, February 8, 2012

குழப்பம் தீர்ந்தது; விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு?-09-02-2012

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வா, நேரடி போட்டித் தேர்வா? என்ற, பல மாத குழப்பம், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

மே இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதுகுறித்த விளம்பரத்தை விரைவில் வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கி உள்ளது.
யாருக்கு அனுமதி?
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: மே மாத இறுதியில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட அனைவரும், இத்தேர்வில் பங்கேற்கலாம். ஏப்., 1, 2010க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும், இத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும், தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களும் எழுத வேண்டும். ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், பி.எட்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கேள்வித்தாள் விவரம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கேள்வித்தாள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்வித்தாள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும் இருக்கும். பொது அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளும் இடம் பெறும், என கூறப்படுகிறது.
போட்டித் தேர்வு?
மே இறுதியில் தேர்வு நடந்ததும், உடனடியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்த போட்டித் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்
நடப்பு கல்வியாண்டில், 28 ஆயிரத்து 201 ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில், 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு போட்டித் தேர்வும், மற்ற ஆசிரியர்களுக்கு இரு வகையான தேர்வும் (தகுதித் தேர்வு மற்றும் முக்கிய போட்டித் தேர்வு) நடத்தப்படும்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள், அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாக பணியில் சேர்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு வாரியத்தின் மொத்த பணியாளர்கள் 14 பேர்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. வாரியத்தில், அதிகாரிகளைத் தவிர்த்து, அலுவலக பிரிவுகளில் வெறும், 14 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில்; மூன்று உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், ஒரு சுருக்கெழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களே இல்லாத குறையையும் முதல்வர் போக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.
குறைந்தது, ஐந்து கணினி இயக்குனர்களை நியமனம் செய்ய, முதல்வர் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள், பணியாளர்கள் விவரம்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்-1, உறுப்பினர் - செயலர்-1, உறுப்பினர்-1, கூடுதல் உறுப்பினர் -2, கண்காணிப்பாளர்-2, உதவியாளர்-4, இளநிலை உதவியாளர்-3, தட்டச்சர்-3, ஸ்டெனோ-2.

More Info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=13043&cat=1


Thursday, February 2, 2012

ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பின் தனித்தேர்வு முடிவு வெளியீடு- 02 Feb 2012

சென்னை: ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பில், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த தனித்தேர்வர்கள், முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளை எழுதியவர்கள்.
தேர்வு முடிவை, தேர்வெழுதிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று, தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்து அறிந்துகொள்ளலாம்.
கருத்தியல் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சிப் பெற்றும், தேர்வு முடிவுகளில் பட்டயம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலை சான்றிதழ்களுடன், வரும் 4ம் தேதிக்குள், அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி -யில் விரைவில் குறைதீர்ப்பு மையம்: நடராஜ்-29-01-2012

சென்னை: தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார்.

More Info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12934&cat=1

1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல்-31-01-2012

சென்னை: தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

More info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12948&cat=1

இது ஒரு அபத்தமான கல்விமுறை: கல்வி திட்ட அதிகாரி-02-02-2012

சேலம்: இதுவரைக்கும், நம் கல்விமுறை, மாணவ, மாணவியருக்கு சரியான உற்று நோக்கலை தரவில்லை.
பனைமரத்தில் ஆண், பெண் என, இரு பிரிவு உண்டு என்பதையும், அதை எப்படி அடையாளம் காண்பது என்பதையும், மாணவர்களுக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், அதற்கு பதில் பனைமரத்துக்கான பொட்டானிக்கல் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், மாநில அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது.
இதில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:
இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது.
மேல்நிலைக் கல்வியில் மாணவர் விரும்பிய குரூப் கொடுப்பதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணே அடிப்படையாக உள்ளது. இதனால் மாணவனுக்கு பிடித்த பாடம் ஒன்றாகவும், நாம் வழங்கும் பாடம் ஒன்றாகவும் உள்ளது. 450 மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பலாம். 250 மதிப்பெண் எடுத்தவர்கள் கணிதப் பாடத்தையும் விரும்பலாம்.
ஆனால், இதற்கெல்லாம், நமது தேர்வுக் குழு அனுமதிப்பதில்லை. இங்கு ஒரு தடவை சிறப்பு தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னைக் கேட்டால், பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் என்பேன். கல்வி ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு கப்பலில் பயணித்தால், அதில் உள்ள அனைவரும் அடுத்த கரைக்கு செல்ல வேண்டும். அதில் சிலரை நடுவில் தூக்கி எறிவது, எந்த விதத்திலும் நியாயமாகாது.
இன்று நாட்டில் மிகப்பெரிய அதிகார சக்தியாக விளங்குவது அரசியல். அதற்கு அடுத்து, பணபலம் மிக்கவர்களாக தொழிலதிபர்கள். இந்த இரண்டிலும் இருப்பவர்கள், நம்மிடம் நல்ல மதிப்பெண் பெற்றவர்களா? நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. நமது கல்வி முறையிலும் மாபெரும் பிரச்னைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவனை, படி,படி என விரட்டிவிட்டு, 11ல் ப்ரீயாக விட்டு விடுகிறோம்.
மீண்டும், 12ம் வகுப்பில் விரட்டுகிறோம். அதேபோல், பிளஸ் 2 பாடம், ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து, மார்ச் வரை நடத்த தயாரிக்கப்பட்டது. பத்து மாதத்துக்கு புத்தகம் எழுத வேண்டியது. பின் அதை, ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டியது; அதையும் அபிஷியலாகவே முடிக்கிறோம், அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.