Tuesday, February 21, 2012

ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை-24-01-2012

தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படும் நிலையில் அனைத்து உயர்நிலைப் பள்ளிக்கும் பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டில் 200 நடுநிலைப் பள்ளிகளும் 2010-11ம் ஆண்டில் 344 பள்ளிகளும் 2011-12ம் ஆண்டில் 710 பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளை தவிர்த்து 4,600க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 100க்கும் குறைவாக மாணவர்கள் இருப்பின், இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்பணியிடங்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தமிழ் பாடத்தில் பி.எட்., முடித்து தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர்.
இதனால் தமிழ், அறிவியல், கணிதம் என மூன்று பாடத்தில் மட்டுமே பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவே உள்ளதால் பெரும்பாலான பள்ளிகளில் கணிதம் அல்லது அறிவியல் பட்டதாரி ஆசிரியரே ஆங்கிலம் அல்லது சமூக அறிவியல் பாடங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், சமூக அறிவியல் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாட வாரியான ஆசிரியர்கள் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர் எண்ணிக்கை, மிக குறைவாகவே உள்ளது. உரிய பாடத்தில் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படும் போது கல்வித் தரம் மேலும் மேம்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கேற்ப தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




No comments: