இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு(சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை, உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை முன்பு இருந்து வந்ததைப் போன்று பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கிடையே இந்தியாவில் இலவச கட்டாய கல்வி சட்டம் கடந்த 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முதல்கட்டமாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் மட்டும் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ.) வரையறை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டு உள்ளது. மொழி ஆசிரியர்(தமிழ், ஆங்கிலம்), கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சமூகவியல் ஆசிரியர் என்று 3 வகையாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது முதல்முறையாக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய பாடத்திட்டம் இன்னும் ஓரிரு நாளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதன்மூலம், எந்த முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், என்னென்ன பாடங்களை படிக்கவேண்டும் என்பதையும் தேர்வு எழுத காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதிதேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்த மார்க் 150. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். மதிப்பெண் தகுதியையும் கூட்டிக் கொள்ளலாம். தகுதித்தேர்வில் தேர்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்று 5 ஆண்டுகள் செல்லத்தக்கது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்பட அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்தான் (60 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு வேளை இடஒதுக்கீட்டு பிரிவினரில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் தேவையான அளவு தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மட்டும் மதிப்பெண் தகுதியை சற்று குறைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
1 comment:
Post a Comment