சென்னை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கான, 34 பணியிடத்திற்கு, 66 ஆயிரத்து 957 பேர் போட்டியிடுகின்றனர்.
தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு, வரும் 19ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அதே நாளில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் தேர்வுகள் இருப்பதால், பிப்., 26ம் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 1,548 பேரின் விண்ணப்பங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. இதற்கான காரணங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு, இணையதளம் மூலம் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள, 66 ஆயிரத்து, 957 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பாட வாரியாக, தமிழ் - 10,926; ஆங்கிலம் - 8,534; கணிதம் -15,498; இயற்பியல் - 7,250; வேதியியல் - 8,612; தாவரவியல் - 3,869; விலங்கியல் - 5,106; வரலாறு - 6,230; புவியியல் - 932 பேர், இத்தேர்வை எழுத உள்ளனர்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே, தேர்வு நடைபெறும் என்றும், இவர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 20ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment