Wednesday, February 8, 2012

குழப்பம் தீர்ந்தது; விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு?-09-02-2012

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வா, நேரடி போட்டித் தேர்வா? என்ற, பல மாத குழப்பம், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

மே இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதுகுறித்த விளம்பரத்தை விரைவில் வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கி உள்ளது.
யாருக்கு அனுமதி?
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: மே மாத இறுதியில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட அனைவரும், இத்தேர்வில் பங்கேற்கலாம். ஏப்., 1, 2010க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும், இத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும், தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களும் எழுத வேண்டும். ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், பி.எட்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கேள்வித்தாள் விவரம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கேள்வித்தாள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்வித்தாள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும் இருக்கும். பொது அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளும் இடம் பெறும், என கூறப்படுகிறது.
போட்டித் தேர்வு?
மே இறுதியில் தேர்வு நடந்ததும், உடனடியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்த போட்டித் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்
நடப்பு கல்வியாண்டில், 28 ஆயிரத்து 201 ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில், 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு போட்டித் தேர்வும், மற்ற ஆசிரியர்களுக்கு இரு வகையான தேர்வும் (தகுதித் தேர்வு மற்றும் முக்கிய போட்டித் தேர்வு) நடத்தப்படும்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள், அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாக பணியில் சேர்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு வாரியத்தின் மொத்த பணியாளர்கள் 14 பேர்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. வாரியத்தில், அதிகாரிகளைத் தவிர்த்து, அலுவலக பிரிவுகளில் வெறும், 14 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில்; மூன்று உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், ஒரு சுருக்கெழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களே இல்லாத குறையையும் முதல்வர் போக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.
குறைந்தது, ஐந்து கணினி இயக்குனர்களை நியமனம் செய்ய, முதல்வர் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள், பணியாளர்கள் விவரம்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்-1, உறுப்பினர் - செயலர்-1, உறுப்பினர்-1, கூடுதல் உறுப்பினர் -2, கண்காணிப்பாளர்-2, உதவியாளர்-4, இளநிலை உதவியாளர்-3, தட்டச்சர்-3, ஸ்டெனோ-2.

More Info : http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=13043&cat=1


No comments: