Saturday, September 14, 2019

Welcome

Tuesday, July 10, 2012

TNPSC குருப் - II தேர்வில் வெற்றி பெற


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC - Tamilnadu Public Service Commission) ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு -1 (Combined Subordinate Services Examination-1, CSSE-1) அறிவிப்பினை வெளி யிட்டுள்ளதை அறிவீர்கள். இது வேலை வாய்ப்பை நோக்கி காத்திருக்கும் பட்ட தாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இவ்வறிவிப் பின் மூலம் அரசு ஊழியர் பதவிக்கு தகுதி யுடையவர்களை தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. அத்தேர்வானது பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்வி களும் பொதுதமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் உள்ளடங்கிய 300 மதிப்பெண் களுக்கான தேர்வாக நடத்தப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக்கிறார்களோ, அவர்களே வெற்றிப் பெற முடியும்.


சரி.வெற்றி பெறுமளவுக்கு மதிப்பெண் களை பெறுவது எப்படி? முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.


பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.


இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.


இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.


இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,


பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,


எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.


அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள். 

Wednesday, July 4, 2012

ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இதற்காக ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,451 இடைநிலை ஆசிரியர்கள், 18,345 பட்டதாரி ஆசிரியர்கள், 634 வட்டார வள மைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் தாள் 1-ல் 60 ஆயிரம் ஆண்கள், 1,86,913 பெண்கள் எழுதுகின்றனர். தாள் 2-ல் (பட்டதாரிகளுக்கானது) 1 லட்சத்து 6 ஆயிரத்து 908 ஆண்கள், 2,43,774 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர். இரண்டு தேர்வையும் சேர்த்து 14, 137 ஆண்கள், 44,305 பெண்கள் எழுதுகின்றனர். 

பார்வை குறைபாடு, ஊனமுற்றவர்கள் 3,556 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 1027 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் ஓஎம்ஆர் விடைத்தாள் அச்சிடப்பட்டுள்ளது. 55,339 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வு எழுத விண்ணப்பித்த பல பேர் தவறான விவரம் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலம், தமிழ் என எந்த மொழியில் எழுதுகிறோம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். அதுபோல், பெயர், பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு இருந்தால் தேர்வு மையத்துக்கு வரும்போது உண்மை நகல்களை காண்பித்து சரிப்படுத்திக்கொண்டு தேர்வு எழுத வேண்டும்.

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இன்டர்நெட்டில் பார்த்து தேர்வு எழுத பெயர் உள்ளதா என சரிப்பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் தவறு, ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு நாளை முதல் ஒவ்வொரு மாவட்டமாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள். பிரச்னை உள்ளவர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து தவறுகளை சரி செய்துகொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து இருந்தால் அதற்கான நகல், பணம் கட்டிய ரசீது, ஒப்புகை சீட்டை அதிகாரிகளிடம் காண்பித்து சரிபார்த்து கொள்ளலாம். 

குறிப்பிட்ட தேர்வு மையத்துக்குத்தான் ஹால் டிக்கெட் வரும். ஒவ்வொரு தேர்வு அறையில் 20 பேர் உட்கார வைக்கப்படுவார்கள். ஹால் டிக்கெட் அனுப்பிய விவரம், பெயர் பட்டியல் போட்டோ இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒஎம்ஆர் சீட்டில் நீல, கருப்பு பேனாவால் எழுதவேண்டும். பென்சில் பயன்படுத்தக்கூடாது. கால்குலேட்டர், லாக் டேபிள், செல்போன் கொண்டு செல்லக்கூடாது. கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கும். மொழி பாடம் மட்டும் அவரவர் தாய்மொழியில் இருக்கும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.

Tuesday, June 26, 2012

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது


சேலம் : ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கே பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற தகவல் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் சக்தி சேலத்தில் தெரிவித்ததாவது:

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தான் பணி நியமனம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவுப்படி, 23.8.2010க்கு முன்பு, ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியான அறிவிப்புகளுக்கு இந்த தகுதி தேர்வு பொருந்தாது. கடந்த திமுக ஆட்சியின்போது 2006,07ல் 7,979 பட்டதாரி ஆசிரியர்கள் சீனியாரிட்டிபடி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, 7,268 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 711 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இவ்வாறு, 2006 முதல் 2010ம் ஆண்டு வரை கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் மொத்தம் 15,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

என்சிடிஇ உத்தரவுப்படி, இந்த காலியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும். தகுதித்தேர்வு நடத்தக் கூடாது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு தான் முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே அவர் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதியானவர் தான். அதனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். அதற்கு, தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட்டு, மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் சக்தி கூறினார்.

நியமனம் செய்வது எப்படி?

 தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற வேண்டும் என்றால் டி.டி.எட், பி.எட் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.
 இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
மார்ச் 22ம் தேதி முதல் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. டி.டி.எட் (இடைநிலை) படித்தவர்களுக்கு தாள்,1 , பி.எட் (பட்டதாரிகள்) படித்தவர்களுக்கு தாள்,2
தேர்வில் இடம்பெறும் கேள்வித்தாளில் 150
கேள்விகள் இடம் பெறும். ஒன்றரை மணி
நேரத்தில் விடைகளை ஓஎம்ஆர் ஷீட்டில் பதிவு செய்ய
வேண்டும்.
இந்த தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுப்பவர்களே தேர்ச்சி பெற்றவர்கள்.
 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.
அதிக மதிப்பெண் பெறும் 18,000 பேருக்கு 5 பாடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது.
 ஆண்டுதோறும் இந்த தகுதித் தேர்வு நடக்கும்.

Thursday, June 21, 2012

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?


"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?-21-06-2012


சென்னை: பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.

பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.

* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.

* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.

* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.

* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.

இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428

உயர்கல்வித் துறை

* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.

* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.

* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318

சட்டத்துறை

* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த 3 துறைகளிலும் மொத்தமாக சேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

Wednesday, May 23, 2012

கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு!-23-05-2012

சென்னை: கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்: தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வு எழுதத் தேவையில்லை. Olay Pro-X Advanced Cleansing System, 0.68-Fluid Ounce Olay Pro-X Advanced Cleansing System, 0.68-Fluid Ounce இந்த தேதிக்குப் பின், ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, பணி நியமனம் பெற்ற ஆசிரியர், கண்டிப்பாக டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், முந்தைய ஆட்சியில் அறிவிப்பு வெளியாகி, இந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்ற அரசு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தேர்வுக் கட்டணமாக இவர்கள் செலுத்திய, 500 ரூபாய் திருப்பி தரப்படுமா என்பது தெரியவில்லை.

Monday, April 16, 2012

ஆசிரியர்கள் நியமனம் : அரசு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

நெல்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக இல்லாததால் விண்ணப்பதாரர்கள் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என சுமார் 36 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பதாக அரசு அறிவிப்புகள் வெளியாயின.

இந்நிலையில் மத்திய அரசு இயற்றிய கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் பணியில் சேர தகுதிதேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு சேர தகுதி தேர்வை அரசு அறிவித்தது. அதற்கு அனைவரும் விண்ணப்பித்தனர். ஜூன் 3ம் தேதி தமிழகத்திலுள்ள முக்கிய மையங்களில் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 150 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற முடியும்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் சட்டசபையில் கல்வித்துறை மான்யக் கோரிக்கையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறுகையில், “ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் நிர்ணயிக்கப்படும் ‘கட்-ஆப் மார்க்‘கின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்“ என அறிவித்தார். இந்த அறிவிப்பு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது தகுதித்தேர்வுக்கு தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் விண்ணப்பங்களில் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, இதில் தேர்ச்சி பெறுவதால் பணி நியமனத்துக்கான எந்தவித உரிமையையும் கோர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாக அரசு அறிவித்துள்ளது.

<ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் நிர்ணயிக்கப்படும் ‘கட்-ஆப் மார்க்‘ அடிப்படையில் என்று அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் பெற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போல் போட்டித் தேர்வு எழுத வேண்டுமா? அல்லது இடைநிலை ஆசிரியர்களை போல் தகுதிதேர்வுக்கு பின்னர் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்படுமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Friday, March 30, 2012

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு புதிதல்ல...:இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ""ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை.இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, திருச்சியில், சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, ""விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதிப்பெண்கள் தான் முக்கியம்:இந்த அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்படுவர்.பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே, அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

கால அவகாசம் நீட்டிப்பு:கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட, இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய, போதுமான கால அவகாசம் வழங்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=438242

Wednesday, March 21, 2012